கல்வித் தகவல்கல்வி வழிகாட்டி தமிழக மாவட்டங்கள்பவர்பாய்ண்ட் பார்வைஆங்கிலம் அறிவோம்அப்துல் கலாம்அறிவியல் ஆயிரம்

எக்ஸ் கதிர்

வில்ஹெல்ம் ராண்ட்ஜன் என்ற ஜெர்மன் நாட்டு அறிவியல் அறிஞர் 1895ஆம் ஆண்டு குளிர்கால நாளொன்றில், தமது ஆய்வுக்கூடத்தில், கேதோட் கதிர் வெளியேற்றக் குழாயில் ஆய்வு ஒன்றை மேற்கொண்டிருந்தார். கேதோட் கதிர் வெளியேற்றக் குழாய் முழுதும், ஒளி ஏதும் தப்பிச் செல்லாவண்ணம், காகித அட்டை ஒன்றினால் மூடி மறைக்கப்பட்டிருந்தது. வெளியேற்றக் குழாய்க்குச் சற்று தொலைவில் சிதறிக் கிடந்த, பேரியம் ப்ளெட்டினோ சயனைட் தடவப்பட்ட காகிதத் துண்டு ஒன்று இருளில் ஒளிர்வதை அவரால் காண முடிந்தது. இத்தகையதோர் ஒளிரும் நிகழ்ச்சியை ஏற்கனவே ஜே ஜே தாம்சன் மற்றும் பல இயற்பியல் அறிஞர்களும் கண்டிருந்தனர் எனினும், அவர்கள் அதனை விரிவாக ஆய்வதற்குரிய முக்கியமானதொரு நிகழ்ச்சியாகக் கருதவில்லை. இக்கதிர்களின் தன்மை பற்றி அவர்கள் ஏதும் அறிந்திருக்கவில்லை; எனவே அவற்றை எக்ஸ் கதிர்கள் எனப் பெயரிட்டு அழைத்தனர். ஆனால் ராண்ட்ஜன் தற்செயலாகக் கண்டறிந்த இந்நிகழ்வுக்கு மிகவும் முக்கியத்துவம் கொடுத்து அடுத்த ஆறு வாரங்களுக்கு இக்கதிர்கள் பற்றியும், இவற்றின் பண்புகள் பற்றியும் ஆய்வு மேற்கொண்டார். இதற்காகத் தமது ஆய்வுக்கூடத்திலேயே, உண்டு, உறங்கி வாழ்வை நடத்தி வந்தார்.

இந்தப் புதிய கதிர்கள் கேதோட் கதிர் வெளியேற்றக் குழாயின் நேர்மின்வாய்ப் பகுதியிலிருந்து வெளிப்பட்டவை போல இருந்தன; மேலும் கேதோட் கதிர்கள், வெளியேற்றக் குழாய்க்கு உள்ளேயே முடங்கி இருக்க, இக்கதிர்கள் மட்டும் குழாய்க்கு வெளியே 2 மீட்டர் வரை ஊடுருவிச் செல்லக்கூடியவையாக அமைந்திருந்தன. ராண்ட்ஜன் மற்ற பொருட்களில் எக்ஸ் கதிர்களின் ஊடுருவல் பற்றி ஆய்வு நடத்திக்கொண்டிருந்த போது, ஈய உலோகத்துண்டின் ஒரு மில்லி மீட்டர் ஆழத்திற்கு இக்கதிர்கள் துளைத்துச் சென்றிருப்பதைக் கண்டார். ஒரு சிறிய ஈயத் தட்டை ராண்ட்ஜன் அவர்கள் எக்ஸ் கதிர்களுக்கு முன்னர் பிடித்தபோது, அக்கதிர்கள் அந்த ஈயத்தட்டின் உருவத்தை மட்டுமல்லாது, அதைப் பிடித்திருந்த அவரது கட்டை விரலின் படிமத்தையும் படம் பிடித்திருந்தன. தசை மற்றும் எலும்புகளின் பல்வகைப்பட்ட ஒளிபுகும் திறன் வேறுபட்டனவாகும்; கைவிரல் எலும்புகளின் படங்கள் அவற்றின் நிழல்களை விடக் கருமையாகக் காட்சியளித்தன. இதன் வாயிலாக ஒளியினால் புகுந்து செல்ல முடியாத பொருட்களையும் எக்ஸ் கதிர்கள் ஊடுருவிச் செல்லக் கூடியவை எனும் முடிவை ராண்ட்ஜன் வெளியிட்டார்.

எக்ஸ் கதிர்கள் பற்றிய பல துல்லியமான கண்டுபிடிப்புகளை ராண்ட்ஜன் கண்டறிந்து வெளியிட்டார். எடுத்துக்காட்டாக, காந்தப் புலத்தால் இக்கதிர்கள் பாதிப்பு ஏதும் அடையாததால், இவற்றின் அலைநீளம் மின்காந்தக் கதிர்வீச்சு ஒளிக்கதிர்களின் அலைநீளத்தை விடக் குறைவாக இருக்க வேண்டும் என அவர் கண்டறிந்து கூறினார். எக்ஸ் கதிர்கள் பற்றிய அவரது ஆறு வார காலத் தீவிர ஆய்வுகளின் முடிவுகள் பல்வேறு புகழ் பெற்ற அறிவியல் இதழ்களில் வெளியிடப்பட்டன. ராண்ட்ஜனும் இக்கதிர்களை எக்ஸ் கதிர்கள் என்ற பெயராலேயே அழைத்தார். இக்கதிர்கள் தம் பெயரால் அழைக்கப்படுவதை அவர் விரும்பவில்லை. இக்கதிர்கள் குறித்த தமது கண்டுபிடிப்புகள் பற்றி அவர் ஒரே ஒரு முறைதான் ஆய்வுச் சொற்பொழிவு நிகழ்த்தினார். தமக்குப் பலவகைப் புகழ் மாலைகள் சூட்டப்படுவதை அவர் தவிர்த்தார்.

பல அறிவியல் கண்டுபிடிப்புகள், அவை கண்டுபிடிக்கப்பட்டு பல ஆண்டுகள் கழித்த பின்னர் தான் பயன்பாட்டுக்கு வருவது வழக்கம். ஆனால் எக்ஸ் கதிர்கள் கண்டுபிடிக்கப்பட்ட இரு மாதங்களில் பயன்பாட்டுக்கு வந்தன. ஹேம்ஸ்பியர் மருத்துவமனையில் எலும்புமுறிவு ஒன்றைக் கண்டறிந்து சிகிச்சை அளிப்பதில் அக்கதிர்கள் பயன்படுத்தப்பட்டன. இக்கண்டுபிடிப்புக்காக ராண்ட்ஜன் அவர்களுக்கு 1901ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு அளிக்கப் பட்டது. உலகம் முழுதும் இக்கண்டுபிடிப்பின் முக்கியத்துவம் உணரப்பட்டது. எக்ஸ் கதிர்களின் கண்டுபிடிப்பு மட்டுமின்றி, உருளும் மின்கடவாப் பொருட்களில் காந்த விளைவுகள் பற்றியும், படிகங்களில் மின்நிகழ்வு பற்றியும், ராண்ட்ஜன் அவர்களால் ஆய்வுகள் நிகழ்த்தப் பட்டன. 

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ராண்ட்ஜன் அவர்கள் உர்ஜ்பர்க் (பனாரியா) நகரிலிருந்து மூனிச் நகருக்கு இயற்பியல் துறையில் மேலும் ஆய்வு நடத்தக் குடி பெயர்ந்தார். மூனிச் நகரில் தனிமை வாழ்க்கை நடத்தி வந்த ராண்ட்ஜன் தமது 77ஆம் அகவையில் 1923ஆம் ஆண்டு புகழுடம்பு எய்தினார்.